 | ஐஐடி நுழைவுத்தேர்வில் இந்தி, குஜராத்தியில் வினாத்தாள்: தமிழில் மட்டும் ஏன் இல்லை? ராமதாஸ் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.ஐ.டி முதன்மை நுழைவுத் தேர்வு, ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.ஐ.டி. இறுதி நிலை நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் மொழியில் இடம்பெறாது என்று தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த முடிவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 7.60 லட்சம் மாணவர்களில் 5.36 லட்சம் பேர், அதாவது 70 சதவீதம் பேர் தமிழ் வழியில் கல்வி பெறுபவர்கள் ஆவர். ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகள் இவர்களுக்கு தெரியும் என்ற போதிலும், வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் இருக்கும் என்பதால், கேள்வியை புரிந்து கொள்ள முடியாததால் தேர்வில் தோல்வியடையும் நிலை ஏற்படக்கூடும். இந்திய அரசியல் சட்டத்தின் 14வது பிரிவின்படி அனைவரும் சமம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தி பேசும் மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் தாய் மொழியில் வினாத்தாள்களை அளித்துவிட்டு, மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கில மொழியில் வினாத்தாள்களை அளித்து தேர்வு எழுதச் செய்வது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் முதன் முறையாக ஐ.ஐ.டி. முதன்மை நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் குஜராத்தி மொழியிலும் அச்சிடப்படவுள்ளன. இது பற்றிக்கேட்ட போது குஜராத் மாநில பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுடன் சேர்த்து நடத்த குஜராத் மாநில அரசு ஒப்புக்கொண்டிருப்பதால் இந்த சலுகை தரப்பட்டிருப்பதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அனைத்து மாநிலங்களிலும் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த ஒப்புக் கொள்ளும்படி மாநில அரசுகளை பணியவைப்பதற்கான கருவியாக ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை மத்திய அரசு பயன்படுத்துவதாக தோன்றுகிறது. மாநில அரசுகளை மிரட்டி பணிய வைக்கும் மத்திய அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த தமிழக விரோதப் போக்கை தமிழகத்தில் உள்ள அனைத் துக்கட்சிகளும் கண்டிப்பதுடன், மத்திய அரசினை அனைத்து நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment