Saturday, 10 December 2011

கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்ட செய்திகள்


ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

Posted: 10 Dec 2011 08:30 PM PST

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

              ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் முன்னிலை வகித்தார். ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மற்றும் அதிக மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும் என மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி தெரிவித்தார்.














கடலூரில் பிடிபட்ட ஆஸ்திரேலிய ஆந்தை

Posted: 10 Dec 2011 03:54 AM PST


கடலூர் செம்மண்டலத்தில் பிடிபட்ட ஆஸ்திரேலிய வகை ஆந்தை.
கடலூர்:

          ஆஸ்திரேலியன் ஆந்தை ஒன்று, கடலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது.  கடலூர் செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோயில் அருகே வியாழக்கிழமை அதிகாலை, சாம்பல் வண்ணம் கலந்த வெள்ளை நிற ஆந்தை ஒன்று சுற்றித் திரிந்தது. 

            அளவில் மிகப் பெரிதாக இருந்த அந்த ஆந்தையை அப்பகுதி மக்கள் பிடித்தனர். ஆந்தையின் உடலில் சிறிய காயம் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அதை வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.  ஆஸ்திரேலியன் பான் என்ற அந்த அரிய வகை ஆந்தையை மாவட்ட வன அலுவலர் ஏ.சுப்பிரமணியன் கைப்பற்றி, பாம்பு பிடிக்கும் வல்லுநர் கடலூர் புனம்சந்த் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஆந்தையின் காயம் குணம் ஆனதும், வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.  இறக்கைகளை விரித்த நிலையில் ஆந்தை 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. 








அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

Posted: 10 Dec 2011 03:44 AM PST

கடலூர் : 

             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க கடலூர் தகவல் மைய மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மையத்தின் பொறுப்பு அதிகாரி சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்க கடலூர் தகவல் மையத்தில் பட்டய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் வசதிக்காக மாணவர் சேர்க்கை வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

சேவைமையம், 9 ஏ, 
முதல் தளம், 
புதுப்பாளையம் மெயின்ரோடு, 
கடலூர்.

மேலும், 04142-293077, 94877 86131 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 184 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி

Posted: 10 Dec 2011 03:39 AM PST

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,க்கள்) பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்று வாருவாய் கோட்டம், ஏழு தாலுகா, 32 குறுவட்டம் மற்றும் 901 வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
 
              இதில் வருவாய் கிராமங்களை நிர்வகிக்க 604 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிராமங்களில் நிலவரி வசூலித்தல், கணக்குகள் பராமரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சிட்ட அடங்கல், ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வி.ஏ.ஓ.,க்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

               குறிப்பாக தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகள் தேர்வு செய்வது, ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம், கிராம சபைக் கூட்டம், அரசின் நிவாரண உதவிகள் வழங்குவது, இயற்கை இடர்பாடுகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை கொடுப்பது உள்ளிட்ட அரசு மேற்கொள்ளும் இதர பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

            இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 604 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களில் தற்போது 184 பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் வருவாய் கிராமங்களையும் சேர்த்து பார்த்து வருகின்றனர்.இதனால் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் வி.ஏ.ஓ., எப்போது வருவார் என அவரது அலுவலகம் முன் நாள் முழுக்க காத்திருப்பது வேதனையாக உள்ளது. கிராம கணக்குகள், "அ' பதிவேடு, வாரிசு சான்றிதழ், அரசு உதவிக்கான சான்றிதழ்கள் பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.















No comments:

Post a Comment