Wednesday, 7 December 2011

கடலூர் மாவட்ட செய்திகள்: கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டம்: கைவிடக்கோரி முதல்வருக்கு மனு

கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டம்: கைவிடக்கோரி முதல்வருக்கு மனு
Dec 7th 2011, 10:38

கடலூர் : 

          பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

         கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் கடந்த 12ம் நூற்றாண்டில் பராந்தக சோழ மன்னரால் 16 கி.மீ., நீளத்திற்கும் ஒரு கி.மீ., அகலத்திற்கு வெட்டப்பட்ட பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி, கடந்த 50 ஆண்டுகளாக என்.எல்.சி., நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரில் அடித்து வரும் மணல் மற்றும் நிலக்கரி சகட்டினால் 8 கி.மீ., அளவிற்கு தூர்ந்து விட்டதால் தற்போது ஒரு போகம் நெல் பயிரிடவே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏரியை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

            இந்நிலையில் திருச்சோபுரத்தில் செயல்படவுள்ள நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், தங்களது தண்ணீர் தேவைக்கு பெருமாள் ஏரியிலிருந்து தினசரி 1.8 மில்லியன் காலன் (ஒன்றரை கோடி லிட்டர்) தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கடந்த 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வரும் பெருமாள் ஏரியிலிருந்து, நாகார்ஜூனா ஆயில் நிறுவனம் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதித்தால், 50 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வரும் விவசாயம் பாதிக்கும்.

           நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், கடல் நீரை பயன்படுத்தப் போவதாக கூறியது. அதற்கு கூடுதல் செலவாகும் என்பதால் தற்போது, விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வரும் பெருமாள் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முயல்கிறது. இதுகுறித்து தெளிவான அறிவிப்பும் இல்லை .இப்பகுதியில் ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்தாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதோடு, கடல் நீரும் உட்புகும். இப்பகுதி விளை நிலங்கள் உவர் தன்மையடைந்து தரிசு நிலமாகுவதோடு 50 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

              எனவே, இத்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தவிர்க்க ஏரியை ஆழப்படுத்தவும், பரவனாற்றிலிருந்து கடலுக்கு நேரடியாக 2 கி.மீ., தூரத்திற்கு சிறிய ஆறு வெட்டித் தர வலியுறுத்தி பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கச் செயலர் சண்முகம், தலைவர் பாஸ்கரன், தாய் மண் விவசாய - மீனவ ஜீவாதார நலச் சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கூட்டாக தமிழக முதல்வர், அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தலைமைச் செயலர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்





















You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment