"இந்த ஸ்கூல்-லே வேலை பாக்குறத விட, வெளியூர் ஸ்கூல்-லே வேலை பார்க்கலாம்", அதிர்ச்சியடையாதீர்கள்...இந்த வாசகத்தை, சொன்னது வேறு யாருமில்லை, நமதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், நம்மிடம் கூறியவை தான் அவை.
இவ்வாண்டின் தொடக்கத்தில் , குடியரசு தின செய்தி சேகரிப்பிற்கு சக ஆசிரியருடன் சென்ற போது நம்மிடையே பேசும்போது வெளிப்பட்டன இந்த வேதனையான வார்த்தைகள்.
"மாணவர்களை கண்டிக்கவும் முடியவில்லை, மேலும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை" ((((அவர் நம்மிடையே கூறியவற்றை எல்லாவற்றையும் இங்கே வெளிப்படுத்தவில்லை) என்றெல்லாம் ஆதங்கத்தை அடுக்கி கொண்டே சென்றவர், நம்மை விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்,
தரைப்படை – கப்பற்படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அணிவகுப்பு ஆகியவற்றை காணவில்லை என்பதால் எங்கே? என்று வினவிய போது, திருஞான உத்தண்டன் ஆசிரியர் (CTU), ராமைய்யா ஆசிரியர் (DR) இவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்னர் புதிய பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத் தலைமையகம் இப்பிரிவுகளை மூடிவிட்டது. இப்போது சாரணர் படை மட்டும் தான் இருக்கிறது என்பதே பதிலாக கிடைத்தது.
அரசு தேர்வுகள் நடைபெறக்கூடிய "மையம்" என்ற தகுதியை கடந்த சில ஆண்டுகளுகு முன்பு இழந்த இப்பள்ளி அதனை தொடர்ந்து தேசிய மாணவர் படை பிரிவுகளையும் இழந்துள்ளது.
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தரப்படும், தகுதிச் சான்றிதழுக்கு மத்திய அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொடர்வண்டி காவல் படை(RSF), மத்திய காவல் படை(CSF) போன்றவற்றில் குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
உள்ளங்கையில் உலகம் என்று சொல்லக்கூடிய வகையில், தகவல்-தொடர்பில் படித்து முடித்ததும், நிறைய ஊதியம், வசதி-வாய்ப்புகள் எல்லாம் பெருகி வந்தாலும், மாணவப்பருவத்திலிருந்தே படிப்படியாக வளர வேண்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி, சேவை மனப்பான்மை, மெல்ல மெல்ல அருகிக்கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது..
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணி திட்டத்தால், ஊரின் மையத்தில், மாணவர்களின் பெற்றோர்கள் – உறவினர்களின் கண்காணிப்பில் இருந்த இந்த பள்ளி, ஊரை விட்டு ஒதுங்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டப்பட்டது தான் இதில் கொடுமையானது.
இடப்பற்றாக்குறை – பள்ளி விரிவாக்கம் இவற்றை காரணம் கூறி இடம் மாற்றம் செய்யப்பட்ட இப்பள்ளி மாணவர்களிடயே கட்டுப்பாடும் – பொறுப்புணர்வும் நாள் தோறும் பின்னடைவை நோக்கியே செல்கிறது, சில நேரங்களில் இப்படி தான் நம் செயல்கள் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தி விடுகிறது.
தன்னுடைய பணிக்காலத்தில் பரங்கிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சுவர் எழுப்பி, கூடுதல் வகுப்பறைகளை நடத்தி பள்ளி மாணவர்கள் மீது உண்மையான அக்கறை கலந்த கண்டிப்புடன் பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் சந்தானகிருஷ்ணனின் பணிக்காலம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.
சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கே.பாலகிருஷ்ணன், இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்து, பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை, தேர்ச்சி விகிதம், மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப ஆசிரியர் நியமன விகிதம் இவற்றை சரி கண்டு மாணவர்களிடையே ஒழுக்க மாண்புகள் தழைத்தோங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் அவா.
No comments:
Post a Comment