கடலூர் மாவட்ட செய்திகள் |
- 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு
- கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி
- கடலூர் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு
- சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்
- எய்ட்ஸ் நோய் பற்றிய விளக்கங்கள்
- சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி
16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு Posted: 30 Nov 2011 02:59 AM PST "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் தமிழகத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை "அனைவருக்கும் கல்வி இயக்கம்' அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்: தேர்வுக் குழு உறுப்பினர்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும். தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும். பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும். இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும். தற்காலிகமான நியமனம் மட்டுமே... பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும். தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது. அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது. இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார். இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி Posted: 30 Nov 2011 02:57 AM PST சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார். கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார். பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதுபோல வெள்ளத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். மேலும் நந்திமங்கலம், வீரநத்தம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமுற்ற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும் என்றார். நாக.முருகுமாறன் எம்எல்ஏ, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். |
Posted: 30 Nov 2011 02:36 AM PST கடலூர்: கடலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரி வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 305 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி, முதியோர், மீனவர் உதவித்தொகை, ஆடு, மாடு உள்பட பல்வேறு திட்டங்கள் வழங்குவேன் என கூறினார். இதன்பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 7 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார். இதில் விலையில்லா அரிசி மற்றும் விலையில்லா திட்டங்கள் வழங்குவதற்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையும் உருவாக்கினார். இதில் தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் 25 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இவை 234 தொகுதிகளுக்கு வழங்கப்படும். இதில் முதலில் ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கி வரும் விலையில்லா பொருட்களுக்கு இரண்டு வருடத்திற்கு உத்தரவாதம் உள்ளது. விலையில்லா பொருட்கள் ஒரு மாதத்தில் பழுது ஏற்பட்டால் புதிய பொருட்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு பின்பு பழுதானால் பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு தான் பெண் கஷ்டம் தெரியும் என்பதற்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதா விலையில்லா பொருட்கள் வழங்கி வருகிறார். இத்துடன் இந்த பொருட்கள் அனைத்தும் தாய் வீட்டு சீதனமாக பெற்று கொண்டு பெண்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, பழனிசாமி, துணை தலைவர் பாலாம்பிகை, முத்துகுமாரசாமி, தாசில்தார் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். மேலும் விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பெரியதம்பி விழா தொகுத்து வழங்கினார்கள். மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், கந்தன் மற்றும் ஆதிபெருமாள், ஜெயச்சந்திரன், ஜெயமூர்த்தி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்த் நன்றி கூறினார். முன்னதாக மேல் அழிஞ்சுபட்டு ஊராட்சியில் 283 பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். |
சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல் Posted: 30 Nov 2011 02:33 AM PST சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடிநீரில் மழை நீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவைபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று திங்கட்கிழமை கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை. கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து கோட்டாட்சியர் இந்துமதிக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கோட்டாட்சியர் கடலூரில் இருந்து வர தாமதமானதால் தாசில்தார் ராஜேந்திரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் தாசில்தாரிடம் உடனடியாக கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் இந்துமதி சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும் தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமும் அணிவகுத்து நின்றன. மறியல் போராட்டம் கைவிட்ட பின்பும் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். |
எய்ட்ஸ் நோய் பற்றிய விளக்கங்கள் Posted: 30 Nov 2011 02:25 AM PST நாளை 01.12.2011..உலக எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் : எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம். எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் : Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி Deficiency - D குறைத்துவிடுதல் Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர். எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ? எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான். எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் : உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும். எய்ட்ஸ் நோய் பரவும் விதம் : எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.
மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும். நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :
எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ? 1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?
ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் : நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள். எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும். கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம் இந்திய அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம் |
சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி Posted: 29 Nov 2011 08:31 PM PST சிதம்பரம்: சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நடுக்கடலில் வந்தபோது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது. இதில் வடிவேலு படகின் அடியில் சிக்கிக் கொண்டார். வடிவேலுவை ராஜலிங்கம் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜலிங்கம் கரைக்கு நீந்தி வந்து வடிவேலுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றொரு படகில் சென்று படகின் அடியில் சிக்கிக் கொண்ட வடிவேலுவை மீட்டனர். ஆனால் அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
You are subscribed to email updates from கடலூர் மாவட்ட செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment