Thursday, 8 December 2011

கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்ட செய்திகள்


கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள்

Posted: 08 Dec 2011 08:31 PM PST


           கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. 
 
          ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும். அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும் வேளாண் துறை யோசனை தெரிவித் துள்ளது.
 
 நிலம் தயாரித்தல்  
 
             ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.  டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.  மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் பிடிக்கலாம்.  எருதுகளைக் கொண்டு உழவு செய்வதாக இருந்தால் முதல் உழவை இறக்கைக் கலப்பை மூலம் செய்யலாம். 2-வது மற்றும் 3-வது உழவுக்கு நாட்டுக் கலப்பையை உபயோகிக்கலாம்.  மண் நன்றாக மிருதுவாகும் வரை நாட்டுக் கலப்பையை கொண்டு உழ வேண்டும். பின்னர் பார் பிடிக்கும் கலப்பை மூலம் பார் பிடிக்கலாம். 
 
 உரம் நிர்வாகம்  
 
           இயற்கை உரங்களான தொழுஉரத்தை ஹெக்டேருக்கு 25 டன்கள் வரை கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். இதனால், மண் வளம் மேம்படுவதுடன் மண் நலமும் பாதுகாக்கப்படுகிறது.  பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பை பயிரிடப்பட்டிருந்தால் இறக்கை கலப்பையை கொண்டு மடக்கி உழுது பின்னர் 2 வாரங்களுக்குப்பின் உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கேற்ப அடி உரமாக ரசாயன உரங்கள் இட வேண்டும். 
 
 பார் அமைத்தல்  
 
                 சாகுபடி செய்யும் ரகம், நீர் பாய்ச்சுவதற்கு வசதி மற்றும் நிலத்தின் வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் நன்கு தூர்விட்டு வளரும் ரகம் பயிரிடுவதாக இருந்தால் 90 செ.மீ. பாருக்கு பார் இடைவெளி இருக்க வேண்டும்.  நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ. இடைவெளிவிடுதல் வேண்டும். இயந்திரங்கள் மூலம் நடவு, அறுவடை செய்ய 150 செ.மீ. அகலப் பார்கள் அமைக்க வேண்டும்.  கரும்புப் பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்தப் பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.  
 
               ஆழமான சாலில் கரும்பு நடவு செய்தால் நன்கு மண் அணைக்க ஏதுவாக இருப்பதுடன், அறுவடை செய்யும் வரை கரும்பு சாயாமல் நல்ல மகசூல் கொடுக்கும்.  கரும்பு பயிரிடப்படும் பட்டங்கள்  தமிழகத்தில் பொதுவாக டிசம்பர் முதல் மே மாதம் வரை 3 பட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. டிசம்பர், ஜனவரியில் முதல் பட்டமாகவும், பிப்ரவரி, மார்ச்சில் நடுப்பட்டமாகவும், ஏப்ரல், மே மாதத்தில் பின்பட்டமாகவும் பயிரிடப்படுகிறது.  சிறப்புப் பட்டமாக ஜூன், ஜூலையில் கோவை, திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கரும்பு நடவு செய்யப்படுகிறது.  
 
 
 
இது குறித்து கூடுதல் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 
 
 
 இயக்குநர், 
 கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், 
கோவை-641007.  
தொலைபேசி எண்:0422-2472621.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்

Posted: 08 Dec 2011 08:30 PM PST


          உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் 
 
               உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற அடியுரம் இடுவதுடன் கூடுதலாக இலைவழியே 2 சதவிகித டி.ஏ.பி. உரத்தினைக் கலந்து தெளிப்பது ஒரு செலவு குறைந்த எளிய, அதிக பலன் தரும் தொழில்நுட்பமாகும்.  இந்த டி.ஏ.பி. தெளிப்பை இரண்டு முறை செய்வது மிகவும் நல்லது. முதல் முறை உளுந்து விதைப்பு செய்த 25-ம் நாள் அல்லது பூக்கும் தருணமாகும்.
 
 
               முதல் முறை தெளித்த 15 நாள் கழித்து இரண்டாம் முறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தெளிப்பு செய்யத் தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை தெளிப்பதற்கு முந்தைய நாள் 15 லிட்டர் நல்ல நீரில் ஊற வைக்க வேண்டும்.  மறுநாள் ஊற வைத்த நீரில் தெளிவினை மட்டும் நன்றாக வடிகட்டி 185 லிட்டர் நல்ல நீரில் கலந்து ஒரு டேங்க் தெளிக்க 2 மில்லி டீபால் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.  டி.ஏ.பி. அளவை பரிந்துரைத்ததை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிக்கக் கூடாது.  மேலும் அதில் நீரின் அளவு அதிகமானால் செடிகள் மஞ்சளாகவும், குறைந்தால் செடிகள் எரிந்தது போன்றும் காணப்படும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது. இதனால் செடிகளில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெரும்பாலான பூக்கள் பிஞ்சமாக மாறும்.  டி.ஏ.பி. தெளிப்பதால் காய் பிடிப்பு அதிகமாவதோடு காய்களில் உள்ள பருப்புகள் அனைத்தும் நன்றாக முற்றுவதுடன் திரட்சியாகவும், அதிக புரதச்சத்துடனும் எடை அதிகமாகவும் கிடைக்கும். இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பராமரிப்பின்றி மோசமான நிலை

Posted: 08 Dec 2011 02:46 AM PST

சிதம்பரம் :

             பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

 இது குறித்து சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடாவும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை அனுப்பிய மனு:

          தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுவாமி சகஜானந்தரால் சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் அதிகமான ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி அறிவு பெற்றார்கள்.  சிறப்பு வாய்ந்த இப்பள்ளிகள் மற்றும் விடுதிகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த 26-7-2011-ல் விக்னேஷ் என்ற மாணவனும், 17-11-2011-ல் விமல்ராஜ் என்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டனர். அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் நிலைமை மாறவில்லை. 

             இப்பள்ளியினை சீரமைக்க ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்த பள்ளிகள் மற்றும் விடுதிகளை சீரமைக்க இந்த நிதி போதுமானதல்ல. சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தாமதமாகவும், தரமற்ற முறையிலும் வேலைகளை செய்து வருகின்றனர்.  இடிந்த நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளின் கட்டடங்கள், கழிவறைகள், குளியலறைகள், சமையல் மற்றும் உணவு அறைகள், சோதனைக் கூடம், நூல் நிலையம் ஆகியவற்றை மேம்படுத்த பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள மாணவர்களின் தற்கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். 

         தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட இத்துறையிலேயே தனி கல்வி இயக்குநரகத்தை உருவாக்க வேண்டும் என மனுவில் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
















திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு

Posted: 08 Dec 2011 02:40 AM PST




  கடல் போல் கட்சியளிக்கும் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கம்.
 
விருத்தாசலம்:
 
          கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாயத்துக்காக புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
           இதன்மூலம் 15,820 ஏக்கர் நிலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் முக்கியமானதாகும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளிலுள்ள 63 கிராமங்களுக்கு உள்பட்ட 24,059 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நீர்த்தேக்க கரையின் ஒரு பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு 27 அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
             இந்த நீர்தேக்கத்தின் இப்போதைய கொள்ளளவாக 1,890 கனஅடி உள்ளது. இதன் மூலம் 15,820 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 13,561 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூகநலத் துறை அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.  விவசாயிகள் குறை: 24,059 ஏக்கர் பயன்பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து இப்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், 15,820 ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறக்கூடிய நிலையில் உள்ளது. 
 
              இதிலும் கூட கடைமடைப் பகுதியிலுள்ள நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு முழுமையான வாய்ப்பு இல்லை. கரைகளைப் பலப்படுத்தினால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியும். இதனால் 24,059 ஏக்கர் நிலமும் பயன்பெறும்.  ஆனால் கரைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதேபோல் பாசன வாய்க்கலை தூர்வாராததால் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் பாசன நிலங்களுக்கு முழுமையாக செல்லாத நிலையே உள்ளது. எனவே தமிழக அரசு ஏரியின் கரைகளை பலப்படுத்தி, வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.  
 
            ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடப்படும்போது தண்ணீர் திறக்கப்படும் பகுதியில் மலர்கள் மற்றும் நவ தானியங்களை தண்ணீரில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு செய்யாதது ஏமாற்றம் அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 



















கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

Posted: 08 Dec 2011 02:37 AM PST

கடலூர்:

            மழை வெள்ளத்தினால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை சட்டப் பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.  

            கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி (14) மழை வெள்ளத்தில் சிக்கி அண்மையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப் பட்டது.  இதற்கான காசோலையை வாசுகியின் தாயார் கலாவதியிடம் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். கடலூர் வட்டாட்சியர் எழிலன், ஊராட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அதிகாரி தயாளு, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பழநிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாடுகளுக்கு நிவாரணம்: 

          மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த இரு வண்டி மாடுகளுக்கு நிவாரணமாக அவற்றின் உரிமையாளருக்கு ரூ. 40 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.  கடலூர் தங்கராஜ் நகர் சம்பத்துக்குச் சொந்தமான இரு மாடுகள், கெடிலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. இதற்கு நிவாரணமாக ரூ. 40 ஆயிரத்தை சம்பத்திடம், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 















கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு பாடத்திட்ட கையேடு

Posted: 08 Dec 2011 02:36 AM PST

கடலூர்:

            தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

            கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடந்தது.  

கூட்டத்துக்குப்பின் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜோசப் அந்தோனிராஜ் கூறியது: 

            கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.


            குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்களின் தற்கொலை  எண்ணத்தை மாற்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பார்கள்.   

            அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தாமல் இருக்க அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள் மற்றும் உதவித் தொகையை முழுமையாகப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.    மாவட்டக் கல்வி அலுவலர்கள் வசந்தா, கணேசமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 











No comments:

Post a Comment